Saturday, July 6, 2013

Sudalai madan Nellai


திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்குதான் சுடலை மாடனின் ஆலயமும் உள்ளது.
சுப்பிரமணியர் (முருகன்) பழநிக்குச் சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன தூண் அருகில் விளக்கில் தீபம் ஏற்றுமாறும், ஆனால் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். அவ்வப்போது எரிம்து கொண்டு இருந்த விளக்கு மங்கத் துவங்க அதன் திரியை சிவபெருமான் பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது அது பார்வதியின் தொடையில் விழ அது ஒரு பெரிய சதைப் பிண்டமாயிற்று. ஆகவே பார்வதி அந்த சதைப் பிண்டத்துக்கு உயிர் கொடுக்குமாறு பிரும்மாவை வேண்டிக் கொள்ள அவரும் அதை ஒரு குழந்தை ஆக்கினார். அந்தக் குழந்தைக்கு சுடலை என்ற பெயர் வைத்தார்கள். அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து ஸ்மசானத்தில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பிவிடுமாறுக் கூறினார். ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள்.
அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. சுடலைக்கு அந்த இடம் மிகவும் பிடித்து இருந்தது. அங்கு சென்றதும் மீண்டும் அந்த குழந்தைக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஒரு குறிப்பிட்ட ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க, மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான். சுடலை விடவில்லை அதன் பாலைக் கறக்குமாறுக் கூற மசானமும் ஆட்டின் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த குழந்தை குடித்தது. அதன் பின்னர் ஆட்டு இடையன் மசானத்தின் நாக்கில் சுடலை மாடன் ஒரு யந்திரம் வரைந்தார். மேலும் அது முதல் மசானம் எப்போது அழைத்தாலும் தான் வந்து அவருக்கு உதவுவதாகக் கூறி அனுப்பினார்.
மசானமும் சிவகிரிக்குச் சென்று அங்கு யோகக் கலையையும் ஆன்மீகத்தையும் கற்றறிந்து வந்தார். பல வருடங்களுக்குப் பிறகு சுடலை இருந்த மயானத்துக்கு வந்த மசானம் சுடலை மாடன் இருந்த இடத்தில் சுடலை மாடனுக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும் இருந்ததைக் கண்டார். அதைக் கேள்விப்பட்ட மக்கள் மசானத்தை வள குரு சந்நியாசி என அழைத்து அவரையே அங்கு பூசாரியாக இருக்குமாறு கூறினார்கள். அது முதல் மசானத்தின் சந்ததியினர் சுடலை மாறனை வழிபடத் துவங்கினார்கள். முதலில் அவர்கள் சிவலிங்கத்தையே வணங்கி வந்தாலும் அதன் பின் சுடலையின் உருவத்தில் நான்கு கைகளை அமைத்து அதை வழிபட்டனர். அது மட்டும் அல்ல அவர்கள் அங்கு வனப் பேச்சி மற்றும் பிரும்ம ரிஷியையும் பிரதிஷ்டை செய்து அவர்களையும் வணங்கினார்கள். அந்த ஆலயத்தின் வெளியில் பிரும்மா சதிக்கு உருவம் தந்த புதிய சாமியும் உள்ளார். அந்த சிலைக்குப் பின்னால் கல்லில் முண்ட சாமி எனும் தலை இல்லாத உருவச் சிலை உள்ளது. சுடலை மாடனின் ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் வள குரு சன்யாசியின் ஆலயமும் உள்ளது. அதில் வள குரு சன்யாசி லிங்க உருவில் உள்ளார். அவர் இறந்ததும் அவரை அங்கு சமாதி செய்தார்கள்.தாமரபரணி ஆற்றில் இருந்து எடுத்து வரப்படும் நீரினால் இரு முறை சுடலை மாடனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். சுடலை மாடனுக்கு பிரசாதமாக படைப்பதில் ஒரு பகுதியை வள குரு சன்யாசியின் ஆலயத்துக்கும் எடுத்துச் செல்கிறார்கள். ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன என்றால் சுடலை மாடனின் ஆலயத்தில் தரப்படும் பிரசாதம் அவரது ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டில் இருந்து கொண்டு வரப்படும் மண்ணாகும் . அது அனைவரது குறைகளையும், நோய்களையும் நீக்குவதாக நம்புகிறார்கள். தைபூச நாளன்று வள குரு சன்யாசியின் ஆலயத்தில் பொங்கலை பிரசாதமாகப் படைத்து அதை அனைவருக்கும் விநியோகம் செய்கிறார்கள்.
பங்குனி மாதத்தில் (மார்ச்- ஏப்பிரல் மாதங்கள்) சுடலை மாடன் ஆலயத்தில் பெரிய விழா நடைபெறும். அப்போது அவருக்கு வள குரு சன்யாசியின் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்படும் ஆடையை போடுகிறார்கள். சுடலை மாடனின் ஆலயத்துக்கு தினமும் வந்து வள குரு சன்யாசியே சுடலை மாடனுக்கு பூஜை செய்வதாக நம்புகிறார்கள். அந்த விழாவின்போது அங்குள்ள சுடலை மாடன் சக்தி பெரும் சாமியாடி அருகில் உள்ள பிராமணர்களை தகனம் செய்யும் சுடுகாட்டிற்குச் சென்று பூமியைத் தோண்டி ஏதாவது பிணம் கிடைக்குமா எனப் பார்ப்பார். கிடைக்கவில்லை என்றால் வெறும் கையுடன் திரும்புவார். அந்த ஆலயத்தில் பலியாக தரப்படும் கருப்பு நிற மாடுகளின் ரத்தத்தை சாமியாடி குடிப்பார். அவற்றைத் தவிர அங்கு பலியிடப்படும் மற்ற ஆடுகளின் ரத்தத்தையும் அவர் குடிப்பார். முட்டை, இறைச்சி கலந்த இருபத்தி ஒரு பிடி சாதம் சமைக்கப்பட்டு சுடலை மாடனுக்கு படைக்கப்படும். அதைத் தவிர சிகரெட் சாராயம் போன்றவற்றையும் சுடலை மாடனுக்கு தருகிறார்கள். அதன் பின்னர் அனைவரது நலனுக்கும் வேண்டிக் கொள்ளும் மக்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்வார்கள்.